விடுதலைப் புலிகளின் புதையல் தேடி அகழ்வு நடவடிக்கை: நாளை தொடரும் என அறிவிப்பு
புதிய இணைப்பு
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இன்று மூன்று மணியுடன் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் நாளைய தினம் அகழ்வு பணிகள் தொடரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்
பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல்
திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் பிரசன்னத்துடன்
குறித்த அகழ்வு பணி இடம்பெற்றிருந்தது.
முதலாம் இணைப்பு
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை
பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கங்கள் உள்ளிட்ட
பெறுமதியான பொருட்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த அகழ்வு நடவடிக்கை இன்று (23.11.2023) காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணி
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.






