காலி முகத்திடல் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் வழங்கி வைப்பு
கடந்த மே9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதல் சம்பவம்
கடந்த மாதம் கோடா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்பாட்டகாரர்களின் மீது மகிந்த ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பிலான சாட்சியங்கள் இன்று(2) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சாட்சியங்கள் வழங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இந்த சாட்சியங்கள் கோடா கோ கமவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலுக்குள்ளான காணொளி சாட்சியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது சில பொலிஸ் அதிகாரிகள் அதனை பார்வையிட்டதுடன் தாக்குதலை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டு
கொழும்பு காலி முகத்திடலில் மே 09 தாக்குதலின் போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, காலி முகத்திடலில் மே 09 தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் இடையில் 11 நிமிட உரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, பொலிஸ் மா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்களை தேசபந்து தென்னகோன் புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார்.
“தாக்குதல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் ஒரு நாளைக்கு முன்னரே தமக்கு அறிவித்திருந்தும் தென்னகோன் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்” என அவர் சுட்டிக்காட்டியதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பொலிஸ் மா அதிபரை பலிகடா ஆக்குவதற்கு தேசபந்து தென்னகோன் முயற்சிப்பதாக கூறிய சரத் ஜயமான்ன, “சட்டத்திற்கு எதிராக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும், தேசபந்து தென்னகோன் அதனை கடைப்பிடிக்க கடமைப்பட்டிருக்கவில்லை" என்றும் கூறினார்.
"தேசபந்து தென்னகோனால் யார் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
தென்னகோனின் சட்டத்தரணி பி.சி.நளின் லத்தவஹெட்டியின் வாதம்
இதேவேளை, தென்னகோனின் சட்டத்தரணி பி.சி.நளின் லத்தவஹெட்டி, காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமது கட்சிக்காரர் எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பவம் நடந்தபோது தென்னகோன் தனது அலுவலகத்தில் இருந்தார். அலரிமாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் அந்த இடத்திற்கு சென்றுவிட்டார்” என நளின் லத்தவஹெட்டி தெரிவித்தார்.
இதனையடுத்து , சம்பவத்தை தடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரினால் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சந்திரசேகரவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் தென்னகோனிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தென்னகோனிடம் பொலிஸ் மா அதிபர் விளக்கியதாகவும் அதேவேளை, பொதுச் செயலாளர் அமைச்சின் செயலாளரும் குறித்த நேரத்தில் தென்னகோனை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே “பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு, மே 09 சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தென்னகோன் மூத்த அரசியல் பிரமுகரின் ஆலோசனையைப் பெற்றுள்ளார்.” என நளின் லத்தவஹெட்டி மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது, ஜனாதிபதிக்கும் தென்னகோனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் கிட்டத்தட்ட 11 நிமிடங்கள் நீடித்ததாக நளின் லத்தவஹெட்டி தெரிவித்தார்.
இந்த உரையாடலைத் தொடர்ந்து தேசபந்து தென்னகோன் தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க நடவடிக்கை எடுத்தார் என்றும் அவர் கூறினார்.