இக்கட்டான நிலைமையில் நாட்டினைக் காப்பாற்ற வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்
அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாங்கள். அதே நேரம், வெறும் அரசியலுக்காக நாம் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுமில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்துள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை சார்ந்த புதிய ஒழுங்கு விதிகள் மூன்றினை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நேற்று (12.11.2022) உரையாற்றும்போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாங்கள். அதே நேரம், வெறும் அரசியலுக்காக நாம் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுமில்லை, ஓர் இக்கட்டான நிலைமையில், இந்த நாட்டினைக் காப்பாற்றி, எமது மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த நோக்கத்திற்கு முகங்கொடுக்க முடிந்த செயற்பாட்டு தைரியத்துடன், நாங்கள் இந்த அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றோம் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு தடையற்ற பாதைகளை திறந்து விடுகின்றோம்
எமது மக்கள் தங்களது வாக்குகளை எமக்கு வழங்கி, தங்களது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வழங்கிய ஆணையானது எங்களை நிர்ப்பந்தித்து இருக்கின்றது. எனவே, எங்களால் எமது மக்களுக்குக் கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பங்களை கை நழுவ விட முடியாது.
இதன் காரணமாகவே, அரசாங்கங்களுடன் இணைகின்ற போது, நாங்கள் விதிக்கின்ற நிபந்தனைகள் பொது நிபந்தனையாகவே இருக்கின்றது. எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அது.
அதற்காக, அரசாங்கங்கள் எமது மக்களின் பிரச்சினைகளை எல்லாம் உடனடியாகத் தீர்த்துவிடும் என்ற எதிர்பார்ப்பினை மட்டும் முன்வைத்து, நாங்கள் செயற்படுகின்றவர்களும் அல்ல.
எமது நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள், செயற்பாடுகள் காரணமாக எமது மக்களின் பிரச்சினைகளை போதியளவில் தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு நாங்கள் தடையற்ற பாதைகளைத் திறந்து விடுகின்றோம்.
அரசாங்கம் அதில் பயணிப்பதில் தாமதங்களையோ, சிரமங்களையோ எதிர்கொள்வதில்லை என்பது எமது மக்களுக்கு சாதகமான நிலைப்பாடாகும்.
இதற்கு மாற்றமான நிலைப்பாட்டினை கொள்கையாக வகுத்துக் கொண்டவர்கள் எமது சக தமிழ் அரசியல்வாதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
அதாவது, எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவற்றை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டும் அவ்வப்போது கையில் எடுத்து, பின்னர் தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகளை, தீராப் பிரச்சினைகளாக்கி, அப்பிரச்சினைகளை எமது மக்களின் வீடுகளிலேயே குடியமர்த்தி வைத்து வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.
வாக்குகளை சூறையாடுவதே முதலீடு இல்லாத பண்டமாற்று அரசியல்
இதன் மூலம் எமது மக்களது வாக்குகளை சூறையாடி வருவதே முதலீடு இல்லாத பண்டமாற்று அரசியல் என அவர்கள் கொள்கை வகுத்துக் கொண்டவர்கள்.
இதனை இப்போது எமது மக்கள் ‘வீட்டை காட்டி மோசம் செய்கின்ற செயல்’ என
பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.
இத்தகைய கொள்கையின் வரைவிலக்கணமாகவே இவர்கள் இன்னமும் புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
எமது மக்களின் மனங்களில் வருகின்ற மாற்றங்களின் முன்பாக, புலிவாலை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடித்திருக்கவும் முடியாமல் திணறுகின்ற இவர்கள், புலிவாலுக்கு பதிலாக, பூனை வாலைப் பிடித்திருக்கலாமோ என நினைக்கவும் கூடும். எமது நாட்டின் தற்போதைய நிலைமையில் எமது மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாடத் தேவைகளைத் தீர்க்கின்ற வகையில் நாங்கள் உற்பத்தித் துறைகள் சார்ந்த முன்னெடுப்புகளை பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்ற நிலையில், இவர்கள் எமது மக்களது பிரச்சினைகளை தீர்க்காமல், தீர்க்க விடாமல், பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
அத்துடன் நிற்காமல், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற எமது வழிமுறைகளை இடைமறித்து, அதனையும் சீர்குலைத்து, எமது மக்களை நடுத் தெருவில் விடுகின்ற இவர்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் செயற்பட்டு வருகின்றனர்.
இவற்றுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சியிருந்தால், இன்று எமது மக்கள் அனுபவிக்கின்ற எவ்விதமான வாய்ப்புகளும் எமது மக்களுக்கு இதுவரையில் கிடைத்திருக்காது என்பதையும் எமது மக்கள் அறிவார்கள்.
நாங்கள் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே அரசியலில் காலடி எடுத்து
வைத்தவர்கள். அதனையே நான் எனக்குக் கிடைக்கின்ற அமைச்சுக்களின் மூலமும் செய்து
வருகிறேன். என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.