ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைவாய்ப்பு மோசடி - கோடி கணக்கில் மோசடி செய்த நபர் தலைமறைவு
ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, பலரிடம் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துவிட்டு, நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாமல் தலைமறைவாக இருக்கும் சந்தேகநபர் குறித்து தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுதித் கசுன் மாரகே என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு மோசடி விசாரணை
குறித்த நபருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு, மொரட்டுவை மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மொரட்டுவ, கொழும்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளுக்குச் சந்தேகநபர் சமூகளிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நபருக்காக நீதிமன்றத்தில் பிணை நின்றவர்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
பிடியாணை
சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதால், அவருக்குப் பிணை நின்றவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்தேகநபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், மொரட்டுவை விசேட மோசடி விசாரணைப் பிரிவின் 0112641555 என்ற இலக்கத்திற்கு அல்லது கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் 0112675651 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.