மீண்டும் கூட்டு உடன்படிக்கைக்குள் செல்லப்போகும் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம்!
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கு தீர்வை காண மீண்டும் கூட்டு உடன்படிக்கைக்கு செல்லுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு தரப்பிடமும் இதனை வலியுறுத்தியுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறை தொடர்பான விடயங்களை அவர் நாடாளுமன்றில் முன்வைத்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் உற்பத்தி, 800 ரூபா மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் 200 ரூபா என்ற அடிப்படையில் 1000 ரூபாவை வேதனமாக வழங்குவதற்கு இணங்கின
எனினும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் 1000 ரூபா வேதனத்தை கோரி வந்தநிலையில் அரசாங்கம், வேதன நிர்ணய சபையின்கீழ் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
எனினும் தற்போது இந்த பிரச்சினை, நீதிமன்றத்தின் முன் இருப்பதால், இரண்டு தரப்புக்களையும் மீண்டும் கூட்டு உடன்படிக்கைக்கு செல்லுமாறு தாம் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



