கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப்பொருட்கள்! தொடரும் நெருக்கடி
கொழும்பு துறைமுகத்தில் 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை மதிப்புடைய அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேங்கியுள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட கொள்கலன்களால் பண்டிகை காலத்தில் பாரிய நெருக்கடி நிலைமையொன்று ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேங்கியுள்ள கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, கடலை, செத்தல் மிளகாய், பருப்பு மற்றும் மசாலா உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.