எப்ஸ்டீன் விவகாரம்: நோர்வே முன்னாள் பிரதமர் மீது ஊழல் வழக்கு
அமெரிக்காவின் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது "கடுமையான ஊழல்" குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்லாண்ட் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த தூதரகப் பாதுகாப்பை (Immunity) அந்த அமைப்பு நீக்கியதைத் தொடர்ந்து, நோர்வேயின் பொருளாதாரக் குற்றப்பிரிவு' இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட 'எப்ஸ்டீன் கோப்புகளில்' உள்ள மின்னஞ்சல்களின்படி, எப்ஸ்டீன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் ஜாக்லாண்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பாரிஸ், நியூயார்க் உள்ளிட்ட இடங்களிலுள்ள எப்ஸ்டீனின் சொகுசு இல்லங்களுக்குச் செல்லத் திட்டமிட்டதும், எப்ஸ்டீன் ஜாக்லாண்டின் பயணச் செலவுகளைக் கவனித்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டுகள்
மேலும், ஜாக்லாண்ட் வங்கிக் கடன் பெறுவதற்கு எப்ஸ்டீனின் உதவியை நாடியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக ஜாக்லாண்டிற்குச் சொந்தமான மூன்று இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜாக்லாண்ட், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நோர்வே இளவரசி மெட்டே-மேரிட் மற்றும் சில உயர் தூதரக அதிகாரிகளின் பெயர்களும் அடிபடுவது அந்நாட்டில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.