நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கோரும் இ.போ.ச மன்னார் சாலை அதிகாரிகள் (Video)
மன்னார் நகர சபை பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நீண்ட காலமாக இலங்கை அரச போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான மாதாந்த கட்டணம் மன்னார் நகரசபைக்கு செலுத்தாத காரணத்தினால் இன்று காலை அரச பேருந்துகளுக்கான கட்டணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மன்னார் சாலை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மன்னார் நகர சபையின் தலைவருடன் கலந்துரையாடி நிலுவையில் உள்ள பணத்தை செலுத்த கால அவகாசம் கோரியதோடு, இனி வரும் நாட்களில் மாதாந்த கட்டணத்தை செலுத்துவதாக தெரிவித்த நிலையில், அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று போக்குவரத்து சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் நகர சபை பேருந்து நிலையம் மன்னார் நகர சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. குறித்த பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர சபையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
குறித்த பேருந்து நிலையத்தில் மன்னார் தனியார் பேருந்துகள் மற்றும் அரச பேருந்துகள் இணைந்து இணைந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் அரச மற்றும் தனியார் பேருந்து நிர்வாகம் மாதம் மாதம் குறித்த தொகை பணத்தை மாதாந்த வாடகையாக மன்னார் நகரசபைக்கு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை காணப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு அமைவாக தனியார் பேருந்து நிர்வாகத்தினர் அன்று முதல் இன்று வரை தமது மாதாந்த வாடகை பணத்தை செலுத்தி வருகின்றனர்.
எனினும் அரச பேருந்து நிர்வாகம் இதுவரை எவ்வித பணமும் செலுத்தவில்லை. மன்னார் நகர சபை இவ்விடயம் தொடர்பாக பல தடவை நினைவூட்டல் கடிதங்களை மன்னார் அரச பேருந்து நிர்வாகத்திற்கு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 5.45 மணி அளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகர சபையின் செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து மன்னார் நகர சபை பேருந்து நிலையத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மூடி அரச பேருந்திற்கு நாளாந்த நுழைவு கட்டணமாக 100 செலுத்தி டிக்கட்டினை பெற்று உள்ளே செல்ல பணித்தனர்.
போக்குவரத்து சேவை தொடர அனுமதி
வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரச பேருந்துகள் கட்டணத்தை செலுத்தி பேருந்து நிலையத்தினுள் சென்றனர். எனினும் மன்னார் சாலைக்கு சொந்தமான பேருந்துகள் கட்டணம் செலுத்தாது வீதி ஓரங்களில் தரித்து நின்றனர்.
இந்த நிலையில் பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்த இலங்கை அரச போக்குவரத்து சபையின் பிராந்திய பொறுப்பதிகாரி மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரி ஆகியோர் மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.
இதன் போது இ.போ.ச அதிகாரிகள் நிலுவையில் உள்ள பணத்தை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும், இனி வரும் காலங்களில் மாதாந்த கட்டணத்தை செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்னார் நகர சபை போக்குவரத்து சேவையை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்கினர்.









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
