மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் - ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!
கந்தரோடைக்கு வெளிப்படுத்தும் அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந், மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி காம்புகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்ற விமர்சனம் இருக்கின்றது.
விமர்சனங்கள்
கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன.
தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற விமர்சனம் இருக்கின்றது.
இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் அவர்கள் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை.
இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர்களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ். பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.



