வவுனியாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்!
வவுனியாவிலுள்ள வயல் நிலங்களில் தொடர்ந்தும் மண்கள் கொட்டப்பட்டு அவைகளை மேட்டு நிலங்களாக மாற்றப்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது மௌனம் காப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளத்தின் கீழுள்ள வயல் நிலங்களிலேயே இவ்வாறு மண்கள் கொட்டப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை
கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்ற சமயத்தில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தற்போது எவ்வித நடவடிக்கைகளும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விவசாயம் செய்வதற்கான நிலங்கள் இல்லாமல் போகின்ற நிலைமை வவுனியா மாவட்டத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு குறித்த மண்கள் , வேலிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |