இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு இத்தாலி அரசாங்கம் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு இத்தாலி 82,702 வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
