அரச நிறுவனங்கள் சில மூடப்படலாம்.. அமைச்சர் அறிவிப்பு
வருமானம் இல்லாததால் அரசாங்கம் நாளாந்தம் சுமார் 6 பில்லியன் ரூபா கடனாளியாகின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள்
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு நடவடிக்கை எடுக்காவிட்டாலோ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும். கொள்கை கட்டமைப்பின் மூலம் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர்கள் அமைச்சரவையில் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியனாக இருந்தது, அதில் மொத்தம் ரூ.1,115 பில்லியன் அரச துறையின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செலுத்தியதன் பின்னர் அரசாங்கத்திற்கு வரி வருமானத்தில் 153 பில்லியன் ரூபா மாத்திரமே மீதம் உள்ளது.
தற்போதுள்ள கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கு மாத்திரம் அரசாங்கத்திற்கு 1,000 பில்லியனுக்கும் அதிகமான தொகை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாளாந்த கடன்
யார் ஆட்சிக்கு வந்தாலும் அரச துறையின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதியை எந்த கட்சியாலும் பெற முடியாது.
அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 4 பில்லியன் ரூபா எனவும், நாளாந்த செலவீனம் சுமார் 10 பில்லியன் ரூபா. வருமானம் இல்லாததால் அரசாங்கம் நாளாந்தம் சுமார் 6 பில்லியன் ரூபா கடனாளியாகின்றது.
எனவே அரசாங்கம் தனது செலவீனங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.