ஐயாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற மாநகராட்சியின் ஊழியர்கள் கைது
ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், காலி மாநகராட்சி மன்றத்தின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாநகராட்சியின் வருமானவரி பரிசோதகர் ஒருவரும், ஒரு வெளிக்கள உத்தியோகத்தருமே இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளம்பர பலகை ஆவண ஏற்பாடு
பெயிண்ட் விற்பனை நிறுவனம் தொடர்பான விளம்பரப் பலகையை வைப்பதற்காக, காலி மாநகராட்சி மன்றத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்துவதற்கான தேவையான ஆவணங்களை விரைவாக ஏற்பாடு செய்து தருவதற்காக குறித்த வருமான வரி பரிசோதகர் ஐயாயிரம் ரூபா இலஞ்சமாக கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பிரகாரம் குறித்த 5,000 ரூபா இலஞ்சப் பணத்தை வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரின் ஊடாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் காலி மாநகராட்சி மன்றத்தின் வருமான பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் சந்தேகநபரின் ஆலோசனையின் பேரில் இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் காலி மாநகர சபையின் வெளிக்களப்பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
வியாழக்கிழமை (25) காலை சுமார் 8.50 மணியளவில் காலி மாநகர சபையின் வருமான பரிசோதகர் அலுவலகத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகளால் இரு சந்தேக
நபர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முறையான விசாரணைகளின் பின்னர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.