ஜனாதிபதி உறுதியாக இருக்கும் விடயத்தையே வலியுறுத்தும் வியாழேந்திரன்
வங்கியையே கொள்ளையடித்த மத்திய வங்கி கொள்ளையர்கள் மற்றும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 சியோன் தேவாலய குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் உட்பட 5 பேருக்கு எதிராக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றில் இருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வியாழேந்திரன் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலே முகமட் ஆசாத் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதால் 30 இற்கும் மேற்பட்டவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். 70 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்களில் கூட சிலர் சில நாட்கள், மாதங்கள் கழிந்து இறந்தார்கள்.
ஆகவே இவ்வாறு மிலேச்சத்தனமான கொடூரமான தாக்குதலை சியோன் தேவாலயத்தில் மேற்கொண்ட இந்த பயங்கரவாதியின் உடல்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நானும், எனது இணைப்பு செயலாளர் யோ.றொஸ்மன், மாநகரசபை உறுப்பினர் செல்வி, அ.சுசிகலா மற்றும் சி.அனோஜன் ஆகியோரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டோம்.
அப்போது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதில் என்னைத்தவிர ஏனைய நான்கு பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மக்களுடைய போராட்டத்திலே ஜனநாயக ரீதியாக, சட்டத்திற்கு முரணாக இல்லாது ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ் மேற்கொண்ட நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கலகம் விளைவித்தாக கூறி எனக்கும், அவர்களுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி கூட இரண்டு விடயத்தை ஆணித்தரமாக கூறியிருக்கின்றார்.
ஒன்று மத்தியவங்கி கொள்ளையை மேற்கொண்டவர்கள்; இரண்டாவது ஏப்ரல் தற்கொலை குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இருந்த யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று.
இந்த விடயத்திலே ஜனாதிபதி உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றார். அதைத்தான் நாங்களும் கூறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.



