நாட்டை உலுக்கிய கோர விபத்து.. எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள தகவல்
துரதிர்ஷ்டவசமான வாகன விபத்துக்கள் ஏற்படுவதைக் குறைத்துக் கொள்வதற்கு எடுக்க முடியுமான சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "வியாழக்கிழமை இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கின்றேன்.
எல்ல பேருந்து விபத்து..
அதேநேரத்தில், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு விரைந்து செயற்பட்ட பொலிஸார் உட்பட பாதுகாப்புப் படையினருக்கும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுக்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், எல்ல நகர மக்களுக்கும் எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
துயர் நிகழும் சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் கொண்டுள்ள உன்னத நற்பண்பை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கக் கிடைத்த சந்தர்ப்பமாக நான் இதைப் பார்க்கின்றேன்.
இந்தத் துயர் சம்பவத்தால் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களினது உறவினர்களுடன் மற்றும் தங்காலை மாநகர சபையின் சகலருடனும் இந்தத் துயரமான நேரத்தில், துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இதுபோன்ற பல துரதிர்ஷ்டவசமான வாகன விபத்துகள் தொடர்பான சம்பவங்களை இந்த வருடம் கடந்து போன காலங்களில் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
இது போன்ற சம்பவங்களைக் குறைத்துக் கொள்வதற்கு எடுக்க முடியுமான சாத்தியமான சகல நடவடிக்கைகளையும், கொள்கை ரீதியிலான தீர்மானங்களையும் எடுக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் தயாராக இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இறுதியாக, இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். காயமடைந்த சகலரும் விரைவாகக் குணமடையவும் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் தொடர் தோல்விகள்.. தமிழரசுக்கட்சியின் திடீர் தீர்மானம் - யோதிலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri
