ஒரே இரவில் ஏழு ஏக்கர் நெற்பயிரை துவம்சம் செய்த யானைகள்!
வவுனியா- ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் ஒரே இரவில் ஏழு ஏக்கர் நெற்பயிரை யானைகள் முற்றாகத் துவம்சம் செய்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள இலுப்பை குளத்திற்கு கீழ் 80 ஏக்கர் அளவில் நெற்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த வயல் பகுதிகளிற்குள் உள்நுழைந்த 50 ற்கும் மேற்பட்ட யானைக்கூட்டங்கள் குடலைப்பருவத்தில் காணப்பட்ட 7 ஏக்கர் நெல் வயலை முற்றாக அழித்து நாசப்படுத்தியுள்ளது.
வங்கியில் கடன் பெற்று செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர் செய்கையை ஒரே இரவில் வந்து யானைகள் அழித்துச்சென்றமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுவரையான காலப்பகுதியில் ஒன்று, இரண்டு யானைகளே வந்து சென்றிருந்த நிலையில், நேற்றையதினம் வழமைக்கு மாறாக 50 ற்கும் மேற்பட்ட யானைகள் வயல் வெளிக்கு வருகை தந்து பயிரை முற்றாக சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன.
தகவல் தெரிந்த நாம் உடனடியாக ஓடிச்சென்று வெடிகொழுத்தி அதனைக் கலைக்க முற்பட்ட போதும், அது எம்மை தாக்குவதற்காகக் கலைத்தமையால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஏனைய பயிர்களையும் யானைகள் அழிப்பதற்கு முதல் எமக்கான யானை வேலிகளை அமைத்துத் தருமாறும் அழிவடைந்த பயிர்களிற்கான நஷ்ட ஈடுகளையும் வழங்குமாறும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.