குப்பை மேடுகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்
மனித யானை மோதல் என்பது நாட்டில் நிலவும் இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வின்றியதைப் போல தொடர்கின்றது.
அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது.இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும்.இதுவே மனித யானை மோதலாக காணப்படுகிறது.
மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை மற்றும் அவற்றின் பண்டைய பாதைகளை ஆக்கிரமிப்பதால் அவை விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன.
யானைகளின் உயிரிழப்புகள்
ஒரு காலத்தில் மனிதர்களால் போற்றப்பட்ட அவை, இப்போது விவசாயிகள் மற்றும் சமூகங்கள் தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடும் போராட்டத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் இது உண்மையிலேயே ஒரு மோதலா,அல்லது இயற்கையும் மனிதகுலமும் இணைந்து செழிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய உலகில் சமநிலைக்கான கூக்குரலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீப நாட்களாக காட்டு யானைகளின் உயிரிழப்புகள் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைவதுடன், இது இரு தரப்பிலும் பேரழிவு தரும் இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.
வடகிழக்கு உட்பட இம் மோதல் கிராமிய பகுதி,வயல் நிலப் பகுதி மற்றும் காடுகளில் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான கடந்த ஆறு ஆண்டுகளில், யானை – மனித மோதல்களால் இலங்கையில் 2,425 காட்டு யானைகளும் 961 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கைகளில் அவதானிக்க முடிகின்றது.
இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் மாத்திரம் 43 காட்டுயானைகளும், மூன்று மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த காலத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இந்த காட்டு யானைகள்- மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் FactSeeker இனால் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி எழுத்து மூலம் தகவல் கோரப்பட்டது.
அவ்வாறு பெற்றுக்கொண்ட தகவல்களை பகுப்பாய்வு செய்ததை அடுத்து, FactSeeker இத்தகவல்களை வெளிப்படுத்துகின்றது. இந்த காலகட்டத்தில் அதிகமான மனித உயிரிழப்புகள் அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இதன்போது 185 பேர் அநுராதபுரம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டுயானைகளின் உயிரிழப்புகள் 2023ஆம் ஆண்டு பதிவாகியுள்ளன. அவ்வாண்டு 488 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனப்பகுதி அடிப்படையில் கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டு யானை உயிரிழப்புகள் பொலன்னறுவை வனப்பகுதிகளில் பதிவாகியுள்ளன. அப்பகுதிகளில் 487 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள காட்டு யானைகள் முக்கியமாக, துப்பாக்கிச் சூடு, மின்சாரக் கம்பி தாக்குதல் மற்றும் பட்டாஸ் மூலமான தாக்குதல் போன்ற காரணங்களால் அதிகமான காட்டு யானைகள் உயிரிழக்கின்றன.
2019 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டுகளில், துப்பாக்கிச் சூட்டால் 409 யானைகளும், பட்டாஸ் தாக்குதல் மூலம் 356 யானைகளும், மின்சார கம்பி தாக்குதலில் 316 யானைகளும் உயிரிழந்துள்ளன. மேலும், அதிகமான சொத்து சேதங்களும் பொலன்னறுவை மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன. 2024ஆம் ஆண்டில் மாத்திரம் மனித-யானை மோதலால் 3,756 பேர் சொத்து சேதங்களை சந்தித்துள்ளனர்.
சொத்து சேதம்
இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவாகியுள்ள மிக அதிகமான சொத்து சேதங்களாகும். யானைகளின் உயிர்வாழ்வு கொள்கைகள் மற்றும் உத்திகளை கையாள்வதில் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்துத் துறைகளின் கூட்டு முயற்சியைகளிலும் சார்ந்துள்ளது. மனிதர்களும் யானைகளும் முரண்பாடுகளின்றி செழித்து வளரக்கூடிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க, பாதுகாவலர்கள்,அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இந்த அற்புதமான உயிரினங்கள் வரும் தலைமுறைகளுக்கு நமது நிலப்பரப்புகளில் தொடர்ந்து சுற்றித் திரிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறான காட்டு யானை மனித முரண்பாடுகள் தொடர்பில் ஒரு கனம் சிந்தித்தால் யானைகள் வாழும் காட்டுப் பகுதிகளை மனிதன் பல தேவைகளுக்காக மரங்களை வெட்டி காடுகளை அழித்து குடியிருப்பு , பயிர்ச் செய்கை என பல தேவைகளுக்காக பயன்படுத்தும் போது இந்த மோதல் நிலை நீடிக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில் "எங்களது ஊரில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இதற்கான காரணம் குப்பை மேடுதான் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக்கோரி பல ஆர்ப்பாட்டங்கள் செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.பேருந்து ஏறுவதற்காக காத்திருக்கும் போது இந்த குப்பைகளின் துர்நாற்றம் தாங்க முடியாது அது மட்டுமன்றி இங்கு பாதுகாப்பான யானை வேலி இல்லை.
இந்த யானை பிரச்சினையால் ஊருக்குள் நிம்மதிமாக வாழ முடியாது.மாலை 5 மணிக்கே யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசங்களை மேற்கொள்வதுடன் எங்களது நெற்செய்கை விவசாயம் தோட்டச் செய்கைகளை அழித்து விடுகின்றன. கச்சான் போன்ற பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்கின்றன. இந்த குப்பை கொட்டுவதனால் அங்குள்ள விலங்குகள் அதனை சாப்பிட்டு விட்டு ஊருக்குள் வருவதனாலும் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறானவற்றில் இருந்து பாதுகாக்க குப்பை மேட்டை அகற்றி பாதுகாப்பான யானை வேலியினை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என பாலம்போட்டாறு பத்தினிபுர கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் ஜீ.விதுர்சியா (வயது_27) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கையில் மனித – யானை மோதல் என்பது கடந்த 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து நடைபெற்று வருகின்றது. இந்த மனித – யானை மோதலின் போது மனிதர்கள் யானைகளினால் மிதிக்கப்பட்டோ ,தூக்கி வீசப்பட்டோ மட்டும் கொல்லப்படும் நிலையில் மனிதர்களினால் யானைகள் துப்பாக்கிகளினால் சுடப்பட்டும் மின்வேலிகளில்,பொறிக்கிடங்குகளில் சிக்கவைக்கப்பட்டும் உணவுப் பொருட்களுக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டும் நஞ்சூட்டப்பட்டும் தொடருந்துகள், வாகனங்களினால் மோதப்பட்டும் கொல்லப்படுவதுடன், நீர் நிலைகள், கிணறுகளில் வீழ்ந்தும் யானைகள் இறக்கின்றன.
மனித – யானை மோதலினால் அதிகளவான யானைகள் உயிரிழப்பதில் உலகளவில் இலங்கை முதல் இடத்திலும், மனித உயிரிழப்புகளில் உலகளவில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த மனித – யானை மோதலுக்கு காரணங்களாக யானைகளின் வாழ்விடங்களின் இழப்பு, காடுகளை அழித்தல், சர்வதேச நிறுவனங்களுக்கு வன நிலங்களை ஒதுக்கீடு செய்தல் ,விரைவான சனத்தொகை அதிகரிப்பு, வறண்ட வலய குடியேற்ற திட்டங்கள், திட்டமிடப்படாத பயிர் செய்கைகள், வேட்டையாடுதல், நீர், உணவின்றி யானைகள் கிராமங்களுக்குள் நுழைதல் போன்றவற்றால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது.
மனித – யானை மோதல்கள்
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தான் மனித – யானை மோதல்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. உலர் வலயத்தில் ஏற்பட்ட மனிதக் குடியேற்றம், பெரிய நிலப்பரப்பு மாற்றங்களுக்கு வழிவகுத்தமை. மனித நடவடிக்கைகள் விரிவடைந்து, யானைகள் வாழும் பகுதிகளைக் காவு கொண்டமை.
மனிதக் குடியேற்றங்களின் தொடர்ச்சியான விரிவாக்கம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற பல உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தமை , மக்கள் குடியேற்றம், நீர்- மின்சார உற்பத்தி மற்றும் விவசாய நிலப் பாசனம் போன்ற முதன்மை நோக்கங்களைக் கொண்ட பல்நோக்கு அபிவிருத்தி திட்டங்கள், யானைகளை பாதித்ததுடன், இவை யானைகளின் தேசங்களை மற்றும் வாழ்விடங்களை அபகரித்து, அவற்றின் இயற்கை வாழ்வமைப்புகளை மாற்றி விட்டதாலேயே மனித – யானை மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
யானைகளை பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அதற்கான துறை சார் அமைச்சு இருந்த போதிலும் காடுகளில் உள்ள யானைகளை ஊருக்குள் வீடுகளிலும் சுற்றுலாத் துறைக்காகவும் தொழில் நிமித்தமாக சட்ட ரீதியான அனுமதி என்ற பேரில் வளர்க்கின்றனர்.
இவ்வாறான நிலையில் காடுகளில் வாழும் யானைகள் சுதந்திரமற்ற நிலையில் இருப்பதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுகிறது. அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யானைகளின் சரணாலயங்கள் மற்றும் மிருக காட்சி சாலைகளில் உள்ள யானைகளை அதிகமாக பார்வையிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட யானைகள் இலங்கையில் கொல்லப்படுகின்றன. இது உலகில் மிகவும் அதிகமான எண்ணிக்கையாக காணப்படுகிறது. விரிவாகும் மக்கள் குடியேற்றம், நிலப் பற்றாக்குறை, மற்றும் விஷமமான பாதுகாப்பு முறைகள் இதற்குக் காரணமாகின்றன.
காடுகள் வெட்டி அழிக்கப்படுவதால், யானைகள் உணவு தேடி கிராமங்களுக்கு வருகின்றன.இதனால் மனித யானை மோதல் உக்கிரமடைகின்றன. மனிதன் தொழில் நிமித்தம் ,வேட்டையாடுதல் உள்ளிட்ட பல சட்ட விரோத தேவைகளுக்காக காடுகளுக்குல் செல்லும் போது சில வேலைகளில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகுகின்றனர்.
யானைகளின் இயற்கை பயண வழிகள் (elephant corridors) முற்றிலும் துண்டிக்கப்படுகின்றன. இதனால் யானைகளின் நடமாட்டம் மக்கள் குடியிருப்பை நோக்கி நகர்கின்றன. மக்கள் யானைகளை எதிரியாகக் காணத் தொடங்குகிறார்கள் இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் யானைகள் மீது வன்முறையாக மாறுகின்றன.
எனவே தான் யானைகளை பாதுகாப்பதும் மனித சமூகத்தின் கடப்பாடாகும் அது போன்று மனித உயிர்களை யானை தாக்குதலில் இருந்து பாதுகாப்பதும் தப்பித்துக் கொள்வதும் நம்மீதுள்ள கவனமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 01 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.