மின்சாரம் தாக்கி யானை பரிதாப மரணம் : சட்டவிரோத மின்வேலியை அமைத்தவர் கைது
அனுராதபுரம், பலுகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சியம்பலாத்மன பிரதேசத்திலுள்ள வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 45 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என ரிதிகல வனபாதுகாப்பு அதிகாரி எம்.டி.புஸ்பகுமார இன்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
நாமல்புர, சியமலாகஸ்தமன பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காட்டு யானைகள் வீட்டுத் தோட்டத்துக்குள் ஊடுருவதைத் தடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக வீட்டுத் தோட்டத்தை சுற்றி மின்வேலியை அமைத்திருந்தார் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த தோட்டப் பகுதிக்கு வந்த காட்டு யானை மின் வேலியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
சுமார் 10 அடி உயரமான யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.