மின்சார ஊழியா்களின் பணிநிறுத்தம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
திட்டமிப்பட்டபடி, நாளை நவம்பா் 3ஆம் திகதி பணி நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் பராமரிப்புச் சேவையில் இருக்கும் ஊழியர்களை கொழும்புக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை, ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளாா்.
அனல்மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் பணிநிறுத்தம் தொடா்பில் நாளை நவம்பர் 3ஆம் திகதியின் பின்னா் ஆலோசிக்கப்படும் என்று ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளாா்.
இதற்கிடையில், 1996 இல் 72 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே மின்சாரசபையின் தொழிற்சங்க கூட்டமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கெரவலப்பிட்டியில் உள்ள யுகதனவி எல்என்ஜி மின்சார உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிராகவும், கேள்விப்பத்திர நடைமுறைகள் இன்றி எரிவாயுவை விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அமெரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தமைக்கு எதிராகவும் மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தொடா்ந்தும் தமது எதிா்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.