மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையினால் கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
6 மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், வருடத்துக்கு இரு முறை மின் கட்டணத்தை திருத்தப்படும் என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளாா்.
எனவே இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாக வெளியான தகவல் தொடர்பிலேயே இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த விளக்கமளித்துள்ளது.
மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்ததாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் செலவுகளை ஈடுகட்ட முடியாது எனவும் மின்சார வாரிய பொது மேலாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |