இம்மாத இறுதிக்குள் மின் கட்டணம் குறையும் : இந்திக அனுருத்த
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவிதுள்ளார்.
புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மின் உற்பத்தித் திட்டம்
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த,
2023 ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளோம். தற்போதுள்ள மின்சார சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவையை வழங்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான விடயங்கள் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மின் உற்பத்தியில் மேலும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திகையைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் 70% மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து மின் உற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின்படி, 2024ஆம் ஆண்டில், சுமார் 600 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.
மேலும், சோலார் பேனல்கள் அமைக்கும் பணியும் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 மெகாவாட்டிற்கு குறைவான திட்டங்களுக்கு விரைவான வேலைத்திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான தரவுகள்
மன்னார், பூநகரி மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கான பல்வேறு பாரிய திட்டங்கள் உற்பத்தித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை மேலும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 2024 ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்க்கும் இலக்குகளை நோக்கி நகர்வதே எமது நோக்கமாகும். தற்போது, மின்சார சபைக்கு புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணித்திறனுக்கு ஏற்ப, பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப வைப்புத்தொகை என்பன அவ்வாறே செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |