ஜனாதிபதித் தேர்தல்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
ஜனாதிபதித் தேர்தலின் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்லாத உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல்
2024.09.21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு நாட்டின் எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்குரிய வசதி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானமும் அல்லாத, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கிய பிழையான ஒரு செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வலம் வருகிறது.
தான் தேருநர் ஒருவராக வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்கெடுப்பு மாவட்டத்திற்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்கு வருவதன் மூலமும், அஞ்சல் வாக்கு உரித்துடையவர்களுக்கு தமது அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் தனது வாக்கை அளிப்பதன் மூலமும் தேர்தல் சட்டதிட்டங்களின்படி வாக்கெடுப்புகளின்போது வாக்களிக்க முடியும்.
தேருநர்களின் முகவரி
2024 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களின் முகவரிக்கு தேருநரின் பெயர், வாக்களிக்கக்கூடிய வாக்கெடுப்பு நிலையம், தேர்தல் நடைபெறும் திகதி, நேரம் என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று அஞ்சல் மூலம் கிடைக்கும்.
ஆளொவருக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்குப் புறம்பான வாக்கெடுப்பு நிலையமொன்றில் வாக்களிப்பதற்கு வாய்ப்பிருக்காது.
ஆகையால், தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்லாத உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு அனைத்து ஊடகங்களுக்கும் அறிவிப்பதுடன், அவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கண்டு ஏமாந்துவிடாமல் தனக்குக் கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால்
அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |