எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு
மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை இடம்பெறும் என பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை
மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்துச் செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.
சட்டமூலத்தைக் கொண்டு வந்த அமைச்சர் கூட அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. எனவே, மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது பற்றி முதலில் தீர்மானத்துக்கு வரவேண்டும்.
அனைத்து கட்சிகளின் இணக்கத்துடன் சிறந்த முறைமையை அறிமுகப்படுத்திய பின்னர் தேர்தல் நடத்தப்படும். ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதற்காக மக்களுக்கு உள்ள உரிமையை நாம் தடுக்கமாட்டோம்.

பிரச்சினையாக உள்ள விடயம்
எனினும், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் பிரச்சினையாக உள்ளது. அது நிவர்த்தி செய்யப்பட்ட பின் நடவடிக்கை இடம்பெறும்.
தேர்தல் திகதி பற்றி தற்போது உறுதியாகக் கூற முடியாது. தேர்தல் முறைமை பற்றி இறுதி முடிவு எட்டப்பட்ட பின்னர் அது நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |