தேர்தல் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்
தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை கையளிக்கும் போது வேட்பாளர்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்கும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முன்மொழிந்துள்ளது.
தேர்தல் ஆணைகுழுவினால், தயாரிக்கப்பட்ட ஊடக அளவுகோல்கள் தொடர்பான மீறல்களைக் கையாள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பரிந்துரை செய்துள்ளார்.
தேர்தல் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கூட்டம், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போது அவர் பரிந்துரைகளை முன்வைத்தார்.
ஊடக அளவுகோல்களை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு வழங்குவது அவசியம் என்றும் அவர் தமது பரிந்துரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முறையான திட்டம் இருக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது.
தற்போதைய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் கீழ் தற்போதுள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அகற்றும் முறைக்கு விரிவான திருத்தம் செய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் வாக்களிக்கும் முறையை அமைக்க வேண்டும்.
அத்துடன் விழிப்புலன் அற்றோர் பிரெய்ல் மூலம் வாக்களிக்க புதிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாக்குரிமையை பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வரும் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆதரவு அளிக்குமாறு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் தலைவரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் வாக்குகளை எண்ணும் போது மின்னணு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச்சாவடியிலேயே வாக்குகளை எண்ணுவது மிகவும் நடைமுறைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப இடைத்தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியமும் குழுவில் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அடுத்த கூட்டம், அக்டோபர் 7ஆம் திகதி நடைபெற உள்ளது.