ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் இல்லை! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதனிடையே, தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமருடனான கலந்துரையாடல்
பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் தீர்மானம்
மேற்கொள்ளும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.