வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி:அரசிடம் நிவாரணம் கோரும் சங்கம்
'டிட்வா' சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் வாகன சந்தையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனேஜ் தெரிவித்துள்ளதாவது, பேரிடரின் தாக்கத்தால் கார்கள் விற்பனை 50 சதவீதம் குறைவடைந்துள்ளது.
கண்டி மற்றும் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆரம்பித்த கொள்வனவை முடிக்க முடியாதுள்ளனர்.
பாதிப்பின் தன்மை
மூன்று மாதங்களுக்குள் விற்கப்படாத இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு வாகன இறக்குமதியாளர்கள் இப்போது 3% மாதாந்த அபராதத்தை எதிர்கொள்கின்றனர்.
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பரிதவிக்கும் மக்கள் வாகனங்கள் வாங்குவது எப்படி சாத்தியமாகும்.அதனால் விற்பனை சுமார் 50% குறைந்துள்ளதாக கூறுகிறார்.
வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கிய முன்பணத்தைக் கேட்க திரும்பி வருவதாகவும், அவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதால் முன்பணத்தைத் திருப்பி செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும், பல இறக்குமதியாளர்களும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
வாகன இறக்குமதியாளர்களும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் அறவிடப்படும் 3 சதவீத அபராதத்திலிருந்து நிவாரணம் கோருவதாகவும், அதற்காக ஆறு மாத நீடிப்பு தேவை என்றும் பிரசாத் மனேஜ் குறிப்பிட்டுள்ளார்.