முட்டை - கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி, கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை மாற்றங்கள்
இந்நிலையில் புதிய விலை மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மாதம் சில்லறை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் குறைக்கப்பட்டன.
இதன்படி, ஒரு முட்டையின் விலை 30 ரூபாயாக குறைவடைந்திருந்தது. அதேவேளை, பல்பொருள் அங்காடி சந்தைகளில் ஒரு கிலோ கோழியின் விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
காரணம்
அத்துடன், ஏனைய சில்லறை விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சி 900 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,000 ரூபாய் முதல் 1,100 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோழி உற்பத்தியாளர்கள் கூறியிருந்தனர்.
பண்டிகை காலங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அரசாங்கம் தனது வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாததால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
