வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட முயற்சி ஆரம்பம்
வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதன் ஊடாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி மற்றும் வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் முயற்சியினால் முதற்கட்ட பேச்சுக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரோடு இடம்பெற்றுள்ளது.
மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி
இதேவேளை, பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதற்கான நிதிப் பலத்தினை பெற்று கொள்வது தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாடுகளுக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ.அற்புதராஜா, நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், பல்கலைக்கழகத்தின் துறை சார் தலைவர்கள், வைத்தியர்கள், வவுனியா பிரதேச செயலாளர், சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களும் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


