மருத்துவ துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் ஏறாவூரில் திறந்து வைப்பு
தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எல். தாஹிறா சபியுதீன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மருத்துவ துறைசார் பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாதியர் பயிற்சி நெறி
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் தராதரத்துடன் கூடிய இந்தப் பயிற்சி நெறிக்கு நாடெங்கிலுமிருந்தும் 35 தாதிய உதவியாளர் பயிலுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தாஹிறா,

மூன்றாம் நிலைக் கல்வி தொழில்சார் கல்விச் சான்றிதழுடன் கூடிய இந்த தாதிய உதவியாளர் பயிற்சியைப் பூர்த்தி செய்வதற்குரிய பணியிடப் பயிற்சிகளுக்கு சகல உதவிகளையும் வழங்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
இந்தப் பயிற்சி நெறி அரச, தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது வெளிநாடுகளிலுள்ள வைத்தியசாலைகளிலோ பணியாற்றுவதற்கும், உங்கள் வாழ்க்கையை பொருளாதார ரீதியில் வளப்படுத்திக் கொள்வதற்கும் உங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.
மனித நேயம் மிக்க கற்கை
சூம் தொழிநுட்பத்தின் வாயிலாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம். பௌஸ், தாதிய சேவை என்பது வெறும் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதல்ல.
அது அன்பு, மனித நேயம் ஆகியவற்றின் ஊற்றாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அன்பு, பண்பு, கருணை, கனிவு, மனித நேயம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் பராமரிப்பு செய்யக்கூடியதாக இருந்தால் அது பெரும் பாக்கியமாக இருக்கும். அதனாலேயே நாம் இந்தக் கல்வி நிலையத்தை ஏறாவூரில் ஆரம்பிக்கிறோம்.

எதிர்காலத்தில் இந்தக் கல்வி நிலையம் மனித நேயத்தின் கலங்கரை விளக்காகத் மிளிர்ந்து முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், ஏறாவூர் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வானதி கிரிதரன், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய முகாமையாளர் யூ.எல். நூகுலெப்பை, திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்றஹ்மான், கற்கை நெறிகளுக்கான இணைப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா, காதி நீதிவான் அலிமுஹம்மத், முன்னாள் அதிபர் எம்.எம்.ஜலால்தீன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் காதலர்கள் செய்த பெரும் பணமோசடி! சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்
ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம் இருக்கின்றது! கிழக்கு மாகாண ஆளுநர்