நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியான எதிர்வுகூறல்
2026ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக மந்தமடைந்து 2.9 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
திட்வா புயலின் தாக்கங்களின் காரணமாக, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2026ஆம் ஆண்டில் 3.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகும் என சர்வதேச நாணய நிதிய அறிக்கைகள் குறிப்பிடிருந்தன.

எனினும், திட்வா சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதம் வரை குறையும் என சர்வதேச நாணய நிதிய பணியாளர் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதம் வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறியிருந்தார்.
திட்வா புயல் தாக்கத்திற்கு முன்னதாக அவர் இந்த கருத்தினை வெளியிட்டிருந்தார்.
அதே நேரத்தில், 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, முன்பே கணிக்கப்பட்டிருந்த 4.5 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாகக் குறையும் என்றும், புதிய பொருளாதார முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள், மீளமைப்பு செலவுகள் மற்றும் பொருளாதார செயல்பாடுகளில் ஏற்பட்ட தடை ஆகியவை, எதிர்வரும் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார மீட்புக்கு பெரிய சவாலாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.