கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் அதானிக்கு இல்லை - அமைச்சர் தகவல்
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய வர்த்தகர் கௌதம் அதானிக்கு வழங்கப் போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானிக்கு வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக துறைமுக ஊழியர் தொழிற்சங்கங்கள் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தன..
அதற்குப் பதிலளிக்கும் வகையில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பளுதூக்கிகளை பொருத்துதல் தொடர்பில் சீன நிறுவனமொன்றுக்கு 39 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.
டொலர் பற்றாக்குறையால் நெருக்கடி
எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி காரணமாக அதனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கிழக்கு முனையத்துக்கு அத்தியாவசியமான நவீன பளுதூக்கும் கருவிகள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானிக்கு வழங்கப் போவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனினும் கிழக்கு முனையத்தை அவ்வாறு அதானிக்கு வழங்கும் உத்தேசம் இல்லை.
அதற்குப் பதிலாக அதனை துறைமுக அதிகார சபையின் கீழான வர்த்தக இடமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.