ஆடி பூரத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆலயங்களில் விசேட வழிபாடுகள்(Photos)
இந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று அம்மன் ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு பால்குட பவனியும் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இன்று காலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான அடியார்கள் தலைகளில் பால்குடத்தினையேந்தி ஊர்வலமாக பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம் வரையில் வந்தனர். அதனை தொடர்ந்து ஆலயத்தில் விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் அடியார்கள் தங்கள் கைகளினாலேயே அம்பாளுக்கு அபிசேகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
யாகபூஜையினை தொடர்ந்து மூலமூர்த்தியாகிய வடபத்திரகாளியம்மனுக்கும் விசேட அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இதன்போது ஆடிப்பூரத்தின் சிறப்பினைக்கொண்ட கூழ் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பாற்குட பவனி.
மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
இதேவேளை கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றான ஆடிப்பூர பால்குட பவனி இன்று(22.07.2023) சிறப்பான முறையில் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சிவச்சந்திரன் தலைமையில் பாற்குட பவனியும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ ஆனைப்பந்தி சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குடம் எடுக்கும் அடியார்கள் ஆலயத்தின் பிரதம குருவிடமிருந்து சங்கற்பம் செய்து தெற்பையினை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அம்மனுக்குரிய பாலைப் பெற்றுக் கொண்டதன் பின்பு விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆடிப்பூர பாற்குடப்பவனி ஆரம்பமானது.
பக்தர்கள் மட்டு நகரின் பிரதான வீதிகளுடாகச் சென்று கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கருவறையில் வீற்றிருக்கும் முத்துமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.
ஆலயத்தின் விசேட வழிபாடுகளின் பின் ஆடிப்பூர பால்குடப்பவனி நிறைவு பெற்றது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் பல அம்மன் ஆலயங்களிலும் இவ்வாறு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி-ருசாத்









