நீர் மற்றும் மின் கட்டணங்கள் அதிகரிப்பு:பாடசாலைகளில் ஏற்பட்ட சிக்கல்- இம்ரான் மகரூப்
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் நீர் கட்டணங்கள் மற்றும் மின் கட்டணங்களை செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான அவரது உரையின் போதே அரசாங்கத்திடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நீர் கட்டணங்கள், மின் கட்டணங்கள்

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் இதுவரை காலமும் அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுவந்த நீர்க்கட்டணங்களை இனிமேல் பாடசாலைகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
அதே போன்று மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூபா 1200/- வழங்கப்படுகிறது.வேறு மாகாணங்களில் இதைவிட கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகள் கஸ்டத்தை எதிர்கொள்வதாகவும் இந்த கட்டணங்களை அரசாங்கம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி

வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற நோயாளர் காவுவண்டிகளுக்கு QR முறையை ஊடாக 50 லிட்டர் பெறுவதற்கான வாய்புக்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் அதேபோன்று முச்சக்கர வண்டிகளுக்கும் 5 லிட்டர் போதாமையால் இந்த நிலைமையினை கருத்திற்கொண்டு, நோயாளர் காவுவண்டிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.