கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த தமிழ்க் கட்சிகள் : கிழக்கின் தற்போதைய நிலவரம் (Video)
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் ஏனைய சேவைகள் வழமைபோன்று நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று இயங்குவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இயங்குவதை காணமுடிகின்றது.
வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஆகியவற்றினை கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளினால் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று நடைபெற்றுவருகின்றது. இரண்டாம் தவணைப் பரீட்சை நடைபெறுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து வலயங்களிலும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சில பாடசாலைகளில் பாடசாலை மாணவர்கள் குறைவாக காணப்பட்டபோதிலும் பெரும்பாலான பாடசாலைகள் இயங்குவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகர் உட்பட பெரும்பாலான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தபோதிலும் ஒரு சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றன.
அரச திணைக்களங்கள், வங்கிகள், தனியார் வங்கிகள் வழமைபோன்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் பொதுமக்களின் வருகையானது குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின்
களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்து வடக்கு - கிழக்கில் இன்று (20) பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை நகர் பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுகிறது.
ஒரு சில கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் அதிகளவான கடைகள் வழமைப் போன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் இயங்கி வருவதுடன் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.
பொது போக்குவரத்து வழமைப் போன்று இடம்பெற்றாலும் குறைவானவர்களே பயணத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை
பூரண கடையடைப்புக்கு வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களுக்கு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.