உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: இந்தியப் பிரதமரின் உதவியை நாடுமாறு கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் அபு ஹிந்தின் அடையாளத்தை வெளிப்படுத்த இந்தியப் பிரதமரின் உதவியை இலங்கை நாட வேண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விவாதம் தொடர்பான பிரேரணையை இன்று(22.09.2023) நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த தாக்குதல்களின் முதல் எச்சரிக்கை இந்தியாவிடமிருந்து வந்தது. எனவே, இந்த அபு ஹிந்த் இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது இலங்கையைச் சேர்ந்தவரா என்பதைப் புரிந்துகொள்ள இந்தியாவின் உதவியை நாட வேண்டியது அவசியம்.
சாரா ஜாஸ்மின் தொடர்பான ஆதாரங்கள்
அத்துடன் இந்த அபு ஹிந்த் உண்மையில் அபு சாலேயா அல்லது அபு ராஜபக்சயா என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
தாக்குதல்களுடன் தொடர்புடைய 'சாரா ஜாஸ்மின்' இறந்ததை அறிவிக்க அரசாங்கம் மூன்று தனித்தனி மரபணுச் சோதனைகளை மேற்கொண்டது.
எனினும் அவர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது. இந்தப் பெண், அபுபக்கர் என்ற பொலிஸ் அதிகாரியால் அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதலுக்கு பின்னர் சாரா ஜாஸ்மின் தனது தாயுடன் பேசியதற்கான ஆதாரங்கள் நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மர்மமான சூழ்நிலை
இந்த விசாரணையை நடத்திய ஐ.பி. ஜயசிங்க என்ற பொலிஸ் அதிகாரி கொரோனாவினால் உயிரிழந்தார். அதேநேரம் இந்த விசாரணையில் ஈடுபட்ட புலனாய்வு அதிகாரிகள், மாற்றப்பட்டுள்ளனர். மர்மமான சூழ்நிலையில் இறந்துவிட்டனர்.
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான ஆதாரங்கள், தரவுகள் மற்றும் சாட்சிகள் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளவர்களால் மறைக்கப்பட்டுள்ளன.'' என நிரோசன் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.