உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகும் தனித்துவமான சில தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இதுவரை வெளிவராத பல தனித்துவமான சில தகவல்கள் வெளியாகி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ரிஸ்வி காலிட் சமீர் முன்வைத்துள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூட சில உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு
இவ்வாறு பொலிஸாரைக் கொன்றதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல் என்று காட்டுவதற்காக கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும், அந்த உறுப்பினரை கைது செய்வது குறித்து விசாரணையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் சுதந்திரமாக வழங்கப்படவில்லை என ரிஸ்வி காலிட் சமீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், வாக்குமூலமானது தானாக முன்வந்து கொடுக்கப்பட்டது என்று முடிவு செய்தது.
எனினும் அரசுத் தரப்பு சாட்சியங்களை ஆய்வு செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள் அமர்வானது வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்குத் திகதியை நிர்ணயித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |