மைத்திரி, ரணிலுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல்! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை முன் கூட்டியே அறிந்திருந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்க்கபபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் இருவரை தவிர முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், அடிப்படைவாத கருத்துக்களை பரப்புவோர், அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கும் நபர்கள் சம்பந்தமாக விசாரணை நடத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்தும் ஆணைக்குழு தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதனை தவிர வெளிநாடுகளில் உதவிகளை பெற்று அடிப்படைவாதத்தை பரப்பும் நபர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆணைக்குழுவை நியமித்தார்.
பலரிடம் சாட்சியங்களை பெற்று நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
