உள்ளே வந்தால் சங்கடப்படுவீர்கள் என அசாத் மௌலானாவிடம் கூறினேன்: நாடாளுமன்றத்தில் அறிவித்த பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவிற்கு நான் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது என்னுடன் அசாத் மௌலானாவும் வருகைத் தந்திருந்தார். அப்போது அவரிடம் நான் “உள்ளே வரவேண்டாம் அசாத், வந்தால் சங்கடப் படுவீர்கள். எனவே வெளியே காத்திருங்கள்” என்று சொன்னேன் என பிள்ளையான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 260இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் எனது கவலையை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்த நிரோஷன் பெரேரா என்னுடைய பெயரை எல்லாம் சொல்லி கருத்துக்களை முன்வைத்திருந்தார். நான் நினைக்கின்றேன், அவருக்கு என்னைக் குறித்து பேசுவதற்கான தனிப்பட்ட ரீதியில் என்மீது குற்றச் சாட்டுக்களை சுமத்துவதற்கான தேவை அவருக்கு இல்லை என்று நினைக்கின்றேன்.
இருந்தாலும் அவருடைய கட்சிக்காரர் நளின் பண்டார அவர்கள் என்னுடை பெயரை பலமுறை தேவையில்லாமல், நாகரீகம் இல்லாமல் பயன்படுத்தினார்.
சிறையில் விலங்கிடப்பட்டு கிடந்தேன்..
நளின் பண்டார ஒரு இடத்தில் என்னை மினி மருவா என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார்.
உண்மையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் என்னை இணைத்து பல செய்திகள் வெளிவந்திருப்பதை இட்டு நான் கவலை அடைகின்றேன். இதற்கான விளக்கங்களை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் நிற்கின்றேன்.
உண்மையில் சனல் 4 காணொளியில், என்னுடை செயலாளராக இருந்த அசாத் மௌலானா, தஞ்சம் கோருவதற்காக சொல்லியிருக்கும் அனைத்து விடயங்களையும் நான் மறுக்கின்றேன்.
இது மிகப் பெரிய பழியாக என்மீது விழுவதற்கான வாய்ப்பை அவர் ஏற்படுத்தியிருக்கின்றார்.
உண்மையில் சனல் 4 நிறுவனம் பிரித்தானியாவில் இருந்தாலும் கூட அதற்கு நிதி வழங்கி நடத்துபவர்கள் யார் என்பது தெரியவேண்டும்..
நிச்சயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே நானும் எண்ணுகின்றேன்.
கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நான் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் சியோன் தேவாலயம் உள்ளது. அந்த சியோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தது.
அங்கு 32 உயிரிழப்புக்கள் ஏற்பட்டு மிக அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அந்த சம்பவம் நடந்தபோது நான் பக்கத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்டு அடைக்கப்பட்டு கிடந்தேன். அங்கு சத்தமும் புகைகளும், வைத்தியசாலைக்குச் செல்லும் அம்பியூலன்ஸ் சத்தங்களும் என்னுடைய காதை துளைத்தது.
அங்கிருந்து வந்த ஓலங்களும் கண்ணீரையும் பார்த்து என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அந்த நேரத்தில் எண்ணினேன், என்னால் இரத்தம் கொடுக்க முடியவில்லை. ஒரு குழந்தையை தூக்கி வாகனத்தில் ஏற்ற முடியவில்லை என மிகவும் வருந்தினேன்.
அதன் பின்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு வந்து இரண்டு முறை என்னுடைய வாக்குமூலங்களை நான் வழங்கியுள்ளேன்.
எப்படியென்றால், நான் சிறைச்சாலையில் இருக்கும் போது என்னுடன் பழகிய கடும் போக்குவாதிகளின் கருத்து என்ன என்பது தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதில் கவலையான விடயம் என்னவென்றால், இந்த ஆணைக்குழுக்களுக்குச் செல்லும் போது அசாத் மௌலானாவும் என்னுடன் வந்தார்.
இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்ற அடிப்படையிலே கௌரவமாக நான் அவரிடம் சொன்னேன்.. அசாத் நீங்கள் உள்ளே வந்தால் சங்கடப் படுவீர்கள் வெளியில் இருங்கள் என்று சொன்னேன்.
அதேபோன்றுதான் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் நோக்கம் வெற்றிப் பெற்றிருக்கின்றது. அவர் பிரபலமடைந்திருக்கின்றார். அவருக்கு நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் வெளிநாட்டில் வாழக்கூடிய நிலையை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
அசாத் மௌலானா உண்மையிலேயே ஒரு போலியான, சுத்துமாத்து கதைகளை சொல்லுகின்ற ஒரு நபராக இருக்கின்றார் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |