ஈஸ்டர் தாக்குதல் விசாரணை எப்போது நிறைவடையும் என கூற முடியாது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தும் பொறுப்பு குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரியை ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னதாக அம்பலப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி வழங்கியிருந்தார்.
இந்த உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் நளிந்த இந்த பதிலை வழங்கியுள்ளார்.
விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எப்போது முடிவடையும் என்பது குறித்த கால வரையறைகளை அறிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சதித் திட்டத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களின் பதற்றம் குறித்து அரசாங்கம் குழப்பமடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில பதற்றமடைந்தது போன்று பலர் எதிர்காலத்தில் பதற்றமடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் மிகவும் சிக்கல் மிகுந்த ஒன்று எனவும் பல்வேறு முக்கிய தகவல்கள் அம்பலமாகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.