சுரேஷ் சலே – அசாத் மௌலானா ஹோட்டல் சந்திப்பு!: நீதிமன்றின் உத்தரவு
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானின் முன்னாள் நெருங்கிய சகாவான அசாத் மௌலானா ஆகியோர் ஹோட்டல் ஒன்றில் சந்தித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் ஓர் கட்டமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே மற்றும் அசாத் மெளாலானா ஆகியோர் அஹூன்கல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக அறைகளை ஒதுக்கிக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் கோரியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரும் தகவல்களை வழங்குமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிடம் ஏற்கனவே அனுமதி கோரியிருந்தது.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம் அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் அஹூன்கல்லவில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சுரேஷ் சலேவை சந்தித்ததாக அசாத் மெளானா குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்கு மூலத்தில் மெளலானா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களை திரட்டுவதற்கு ஹோட்டலிடமிருந்து தகவல்களை பெற அனுமதிக்குமாறு நீதிமன்றிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.