ஈஸ்டர் குண்டு தாக்குதல் சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு போதுமான சுகாதார வசதிகள் இல்லை என்று சந்தேகநபர்களின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (1.12.2025) மூன்றாவது நாளாக நடைபெற்றது.

பௌத்தலோக மாவத்தையில் வழக்கு
இந்த வழக்கின் விசாரணை முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிகாரப்பூர்வ இல்லமான எண். 400 பௌத்தலோக மாவத்தையில் நிறுவப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த 26 ஆம் திகதி முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சிறையில் உள்ள இருபத்தி நான்கு சந்தேகநபர்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் இல்லை என்று முன்வைக்கப்பட்ட காரணங்களை பரிசீலித்த தலைமை நீதிபதி, கைதிகளுக்கு தேவையான சுகாதார வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், விசாரணையை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் அமர்வு முடிவு செய்துள்ளது.