கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு காது குத்து விழா! தாதியர்களின் நெகிழ்ச்சியான செயல்
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றுக்கு வைத்தியசாலையில் காது குத்து விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து ஆறு நாட்களில் கை விடப்பட்ட குழந்தை ஒன்று திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்ட நிலையில், அந்த குழந்தைக்கு அண்மையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அக்குழந்தை கடந்த ஒன்பது நாட்களாக கந்தளாய் கோவிட் சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது. இன்று 13ம் திகதி அக்குழந்தைக்கு சரியாக பதினோரு மாதம் என வைத்தியசாலை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது.
இக்குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட கந்தளாய் கோவிட் வைத்தியசாலை ஏழாம் வாட்டுக்கு பொறுப்பான தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து குழந்தைக்கு காது குத்தும் விழாவை நடத்தியுள்ளனர்.
தாதிய உத்தியோகத்தர்களின் இச்செயற்பாட்டு அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.