சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் காலம் தாமதிக்கலாம்: ராஜதந்திர தரப்புக்களின் தகவல்
இலங்கை அரசாங்கம் இப்போது கடன் மறுசீரமைப்பின் கடினமான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
இந்ந நிலையில் இலங்கை இந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியைப் பெற முடியாது என்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிதியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும் என தூதரக தரப்புக்களை கோடிட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நிதி கிடைக்கும் வாய்ப்பு

இந்த நிலையில் அந்த வாய்ப்பும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற கடனாளிகளுடனான முடிவான தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது. இது தொலைவில் இருக்கும் ஒரு வாய்ப்பு.
எனவே இரட்டிப்பு முயற்சிகள் செய்தாலும், குறித்த காலகட்டத்திற்கு அப்பால் நிதி கிடைக்கும் வாய்ப்பு பற்றி அச்சமும் அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம் குறிப்பாக இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள், வெவ்வேறு தரவுகள் தொடர்பான சிக்கலில் சிக்கியுள்ளன.
இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்கல்படி இந்தியா, இலங்கையிடம் பல விடயங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க கடந்த வாரம் புதுடில்லியில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்காக சென்றிருந்த போது இந்த நிலைப்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் தாமதங்கள் ஏற்படுவதால், பொருளாதாரத்தில் மோசமடைந்து வரும் போக்கை மாற்றியமைக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் கடன் வழங்குநர்கள் பற்றிய மற்றுமொரு முக்கியமான கலந்துரையாடல் நவம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கையில் கடன் மறுசீரமைப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை
பெய்ஜிங்கில் நடந்து முடிந்த கம்யூனிஸ்ட் கட்சி அமர்வுகளை கருத்தில் கொண்டு சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முறையான பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடைசியாகப் பேசிய சீனப் பிரமுகராக இருந்த நிதியமைச்சர் லியு குன் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஒரு ராஜதந்திர தரப்பு தகவல்படி, கடனை மீண்டும் திட்டமிடுவதற்குப் பதிலாக, செலுத்த வேண்டியதை திருப்பிச் செலுத்துவதற்காக, சீனா மற்றொரு கடனை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இலங்கை அரசு அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜப்பானுடனும் இதுவரை முறையான பேச்சுவார்த்தைகள்
எதுவும் நடைபெறவில்லை.