டுபாயில் வேலை வாய்ப்பு: பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடந்த 28ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ருவல்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடாத்தி வந்த நிலையில் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார்.
பணமோசடி
குறித்த சந்தேகநபர் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடாத்தி பணமோசடியில் ஈடுபட்டிருந்ததாக பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |