அனுமதியின்றி சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பலர் கைது (Photos)
புத்தளம் பகுதியில் தேக்கு மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட லொறி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மரக்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திய லொறியொன்று இன்று பிற்பகல் புத்தளம் நூர்நகர் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பணியகத்திற்கு அனுமதிப்பத்திரமின்று சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் குறித்த லொறியை நிறுத்த முற்பட்ட வேளையில் லொறியை நிறுத்தாமல் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.
இதன்போது குறித்த கடத்தல் லொறியை பொலிஸார் துரத்திச் சென்றவேளையிலே லொறி வேகக்
கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி
அனுமதியின்றி விறகு ஏற்றி வந்த எட்டு வாகனங்களும் அதன் சாரதிகளும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று கிளிநொச்சி - ஆனையிறவு மற்றும் பூநகரி - சங்குபிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெதவலவுக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் இக்னு அஷாரின் தலைமையில் மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட அவரின் குழுவினரினால் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற கைது
ஆனையிரவு வீதித்தடையில் வைத்து அனுமதியின்றி ஏற்றிவரப்பட்ட விறகுகளுடன் ஆறு வாகனங்களும், பூநகரி - சங்குப்பிட்டி பால வீதி தடையில் 02 வாகனங்களுமாக 08 வாகனங்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒதுக்கப்பட்ட காடுகளிலிருந்து பச்சை மரங்களை வெட்டி அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றி வந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




