நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் அவதி
நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.
அதன்படி இன்று (19) காலை நேரத்தில் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, கந்தபளை, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - வெளிமடை போன்ற பிரதான வீதிகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக ஊர்ந்தபடியே செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொடர்ந்து இவ்வாறான மோசமான காலநிலை காரணமாக நுவரெலியாவில் கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .







