காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு வெளிநாடுகளின் உதவி..! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் டக்ளஸின் கருத்து
வெளிநாடுகள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு உதவி செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்களுக்கு வந்த பெருந்தொகை பணம்
காலிமுகத்திடல் போராட்ட இடத்தில் தொடர்ந்தும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மூவர் தமது வங்கி கணக்கிலிருந்து நான்கு கோடி 50 இலட்சம் ரூபாய் எடுத்துள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களின் வங்கி கணக்குகளில் கோடி கணக்கில் பணம்: பொலிஸ் தரப்பு தகவல் |
இந்த மூன்று நபர்களும் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை அண்மையில் ஆரம்பித்துள்ளனர். அந்தக் கணக்குகளில் கடந்த 15ஆம் திகதி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தலா 150 இலட்சம் ரூபாய் வீதம் 450 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் வைப்பிட்ட சிறிது நேரத்தின் பின்னர் இந்த வங்கி கணக்குகளுக்கு தொடர்புடைய மூன்று பேர் வெள்ளை நிற பிரியஸ் மோட்டார் வாகனத்தில் வங்கிக்கு வந்துள்ளனர். அவர்கள் வந்து கணக்குகளில் இருந்த முழுத் தொகையையும் எடுத்துச் சென்றதுடன், வழக்கமான நடைமுறைப்படி பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை கேட்ட வங்கி அதிகாரிகளையும் அவர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாங்கள் போராட்டத்தில் இருப்பதாகவும், தங்களுக்கு இடையூறு செய்தால் நாளை மறுநாள் வங்கியை முற்றுகையிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் எனவும் குறித்த செய்தியில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையிலேயே வெளிநாடுகள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு உதவி செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த மே மாதம் வழங்கிய செவ்வியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
டக்ளஸின் கருத்து
அந்த செவ்வியில் கஷ்டம் என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கு யாரும் பட்டினியால் இறக்கவில்லை. அங்கு இருப்பவர்கள் ஆட்டம், பாட்டம், கூத்துகளோடு இருக்கிறார்கள் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கூடாரங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு உணவுகள், குடிநீர் எல்லாம் கொடுக்கிறார்கள்.
பொதுவாக சனி, ஞாயிறுகளில் கூட்டம் சேரும் இடம் காலிமுகத்திடல் பகுதி, அந்த கூட்டத்தை எல்லாம் சேர்த்து சொல்ல முடியாது, மற்றைய நாட்களில் இதே மாதிரி இருந்தால் அதை உண்மை என்று எடுத்துக்கொள்ளலாம்.
வட மாகாண ஆர்ப்பாட்டங்களின் தலைமை
இதேவேளை வட மாகாணத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்.
இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எல்லாம் அந்தந்த மாவட்டத்தை சேர்தவர்கள் அல்ல. பொதுவாக யாழ்பாணம், வவுனியா பல்கலைக்கழகங்களை எடுத்துக்கொண்டால் அரைவாசிக்கு மேல் தென் இலங்கை மாணவர்கள்.
அவர்கள்தான் அங்கே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள். அவர்கள் தென்பகுதியில் இருக்கும் போது ஜே.வி.பி என்ற கட்சியின் கீழ் இருக்கிறவர்கள், அவர்களுடைய கொள்கை அது.
தேர்தலை வைத்து சரிசமனாக தீர்வு வந்தால் என்ன செய்யப்போகிறீர்கள். நான் பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை, பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் அடையாளம் கண்டிருக்கின்றோம்.
அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அப்படி ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இந்த குழப்பம் வந்து இந்த பிரச்சினைகளுக்கு தடையை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.