தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது: டக்ளஸ் தேவானந்தா கவலை
தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (10.10.2023) யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் கொள்கை
நான் அடிக்கடி சொல்வதுண்டு காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வது போல கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை பொருத்த வரையிலோ, அல்லது ஜனாதிபதியை பொருத்தவரையிலோ அல்லது அரசாங்கத்தின் கொள்கையை பொறுத்த வகையிலோ பாராபட்சமற்ற, இனவாதமற்ற கொள்கையில் ஒரு செயற்பாட்டை தான் அது முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கத்தில் அமைச்சர் ஒரு சில பேர் இனவாதிகளாக இருக்கலாம், அல்லது இனவாத கருத்துக்களை சொல்பவர்களாக இருக்கலாம், அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவர்கள் அப்படி இருக்கலாம்.
ஆனால் அது அமைச்சரவையின் கொள்கையோ, அரசாங்கத்தின் கொள்கையோ வேலைத்திட்டம் அல்ல, இன்றைய இந்த நிகழ்வு தொடர்பாகவும் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன் தமிழரின் பண்பாடு அல்லது தமிழர்களின் பாரம்பரியம் என்று சொல்லி இங்கு சில நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இருந்தார்கள்.
அதில் தேசிய கீதம் தமிழில் தான் பாடப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு துரதிஷ்டவசமாக அதிகாரிகள் அவ்வாறு செய்தது மன வருத்தத்துக்குரியது.
தமிழர்களின் பண்பாடு
இது அரசாங்கத்தினுடைய கருத்தோ, இன்றைக்கு பிரதம விருந்தினராக இருக்கின்ற அமைச்சருடைய கருத்தோ அல்ல.
நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில், வட மாகாணத்தில் நான் தலைமைத்துவம் வகிக்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் தேசியகீதம் தமிழில் தான் பாடப்படுவதுண்டு. சிலவேளை வேறு அமைச்சர்கள் வருகின்ற போது என்னுடைய கையை மீறி போய் இருக்கலாம்.
அடுத்து தமிழர்களின் பண்பாடு என்று சொல்லப்படுகின்ற ஆரத்தி எடுப்பது இன்று அது எடுத்தது போன்று தெரியவில்லை. அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்த செய்தியையும் கூறிக்கொண்டு, இங்கு நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலுவான கருத்தாக இருந்தது.
சமிபத்தில் ஜனாதிபதி மட்டக்களப்பிலும் இது தொடர்பான கருத்தை சொல்லி இருக்கின்றார்.
தேசிய விழாவில் கூட ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிகின்ற நேரத்தில் தமிழில் பாடுவதற்கான ஏற்பாடு செய்திருக்கின்றார்.
இதற்கமைய ஜனாதிபதியை பொருத்த வரையில் அல்லது அவருடைய அரசாங்கத்தை பொறுத்த வரையில் கொள்கையும் செயற்பாடும் ஒன்றுதான்.
மேலும், சில வேளைகளில் சில அதிகாரிகள் அவ்வாறான தவறுகளை விடுகின்றார்கள். ஆனபடியால் இங்கே முக்கியமான அதிகாரிகள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர்கள் வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை கருத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.