வரப்போகின்ற ஆண்டினை நாவலர் ஆண்டாகப் பிரகடனம் செய்வதற்கும் தயார் : டக்ளஸ் தேவானந்தா
சைவ சமய மறுமலர்ச்சியின் தந்தையான நாவலர் பெருமானுக்கு ஒரு விழா எடுப்பதற்கும், வரப்போகின்ற ஆண்டினை நாவலர் ஆண்டாகப் பிரகடனம் செய்வதற்கும் தயாராகவுள்ள நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர், பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி இராமச் சந்திரக் குருக்கள் பாபு சர்மா, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் அவர்களுடனான சந்திப்பு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலனச் செயற்பாடுகளைச் செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள், நாவலர் கலாசார மண்டபத்தின் புனரைமைப்பு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் யாழ் மாநகர சபை இணைந்து கூட்டு முயற்சியில் நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான பணிகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பாகக் கூறுகையில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு முழு உரிமையுடைய நாவலர் கலாசார மண்டபத்தைத் தற்போது யாழ்.மாநகர சபை நிர்வாகமே பராமரித்து வருகின்ற நிலையில், சில முரண்பாடுகள் நிலவிய போதும் அதனை இரு நிர்வாகமும் இணைந்து பராமரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தைப் பெரிதும் வரவேற்கிறேன்.
எதிர்வரும் ஆண்டு நாவலரின் இருநூறாவது பிறந்த ஆண்டு. இந்த ஆண்டிலே புதுப்பொலிவோடு கூடியதாகச் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் அதற்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பினைச் சிறந்த முறையிலே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தக் கட்டத்தில் நிலையறிந்து கூட்டாக இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்திற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கும் யாழ். மாநகர சபைக்கும் எனது பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.

 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        