மலையக மக்களின் எழுச்சிக்கு உதவிய தமிழ்க் கூட்டணி - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு
சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுச்சிக்கு அடித்தளம் என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியின் விளைவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.

70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ.தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் இருவரும் இணைந்திருந்தனர்.
எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.
எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.